சொற்சுடர் 2026 விவாதப் பயணத்தின் முதல் அத்தியாயம்



விவாதம். இச்சொல்லைக் கேட்கும்போது இரு தரப்பினர் மோதிக்கொள்வது, ஒருவரையொருவர் விமர்சிப்பது, குரலை உயர்த்தி பேசுவது முதலியவை நினைவிற்கு வரலாம். விவாததில் இவை அனைத்தும் ஒரு சில அம்சங்களே. இவற்றையும் தாண்டி, விவாதம் என்பது நம் கருத்துகளைத் தெளிவாகவும் துணிச்சலாகவும் முன்வைக்க உதவும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். இந்த ஆயுதத்தைக் கையாளும் திறனை உயர்நிலை பள்ளி மாணவர்களிடையே வளர்க்கும் குறிக்கோளுடன் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்ற கல்வி செயல்பாட்டுக் குழு (Education Empowerment Committee - EEC) உறுப்பினர்கள் “சொற்சுடர்” தமிழ் கருத்தாடல் பட்டறையை பல வாரங்களாக வடிவமைத்து சிறப்பாக நடத்தினர். குமாரி வர்ஷா வித்யா ஷங்கர் தலைமையிலான இந்த குழுவில் சுமார் 20 இளையர் இணைந்து பங்காற்றினர்.

styc
styc
மே 23 அன்று ஹொங் கா சமூக மன்றத்தில் (Hong Kah Community Club) நடைப்பெற்ற இப்பயிலரங்கில், 32 உயர்நிலை பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். குமாரி கலைவாணி இளங்கோ, முனைவர் மன்னை ராஜகோபாலன், முனைவர் மீனாட்சி சபாபதி ஆகிய அனுபவக் கடலாய் திகழும் பேச்சாளர்கள் தமது பயனுள்ள கருத்துகளை மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் எளிமையாக அமர்வுகள் மூலம் பகிர்ந்துகொண்டார்கள். விவாதத்தின் அடிப்படை, கருத்து வரையறை, பார்வையாளர்களைக் கவருதல், தன்னம்பிக்கையுடன் பேசுதல், செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை முதலியவற்றைப் பற்றி பேச்சாளர்கள் ஆழமாக விளக்கினர். மாணவர்கள் கருத்துகளை உள்வாங்கியதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அமர்வுகளையடுத்து நடைப்பெற்ற விவாத அங்கத்தில் மாணவர்கள் குழுக்களாக பிரிந்து வெவ்வேறு தலைப்புகளைப் பற்றி ஒட்டியும் வெட்டியும் பேசினர். எல்லோர் முன்னால் தைரியமாக பேசவும், தங்களது விவாதத் திறனை மெருகூட்டவும், படிப்பினைகளைச் செயல்படுத்தவும் இவ்வங்கம் தகுந்த வாய்ப்பளித்தது.

styc
styc
இறுதியாக, மாணவர்களின் ஞாபக சக்தியையும் கற்றலையும் சோதிக்கும் வகையில் நடந்த ‘காஹூட்’ வினா விடை அங்கத்தில் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இவ்வங்கத்தில் வெற்றிபெற்ற மாணவர்களும் விவாத அங்கத்தில் சிறப்பு பேச்சாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும் தங்களது உழைப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டனர். சுருங்கக் கூரின், விவாத திறனை யார் வேண்டுமானாலும் வளர்த்துக்கொள்ளலாம் எனும் நம்பிக்கையை மாணவர்களுக்கு ஊட்டியது “சொற்சுடர்” பயிலரங்கு. போட்டிச் சூழலைத் தாண்டி, குழுவாக ஒன்றிணைந்து கற்றுக்கொள்வதை வலியுறுத்திய இப்பயிலரங்கு, ஓர் ஆக்கப்பூர்வமான முயற்சியாக அமைந்தது. விவாத வேந்தர்களாக உருமாறிய மாணவர்கள் தமது விவாதப் பயணத்தின் முதல் அத்தியாயத்தை “சொற்சுடர்” பயிலரங்கின் மூலம் தொடங்கி வைத்தார்கள் என்றால் அது மிகையாகாது.

styc
styc

23 May 2026

Article By : கனிஷ்கா செல்வகுமார்