"கதைப்போமா" : கதைகள் விதைத்த விதைகள், சிந்தனையில் மலர்ந்த பூக்கள்
"கதை" - கேட்பது, சொல்வது, படிப்பது என்பது வெறும் பொழுதுபோக்கல்ல. அது குழந்தைகளின் கற்பனைக்கு இறக்கைகள் தரும் ஒரு அற்புத உலகம். புத்தகங்களின் மீது காதலையும், மொழியின் மீது பற்றையும் வளர்க்கும் வல்லமை கதைகளுக்கு உண்டு. "ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தான்…." என்று தொடங்கும் கதைகள் குழந்தைகளின் மனதில் என்றும் அழியாத இடத்தைப் பிடித்துள்ளன. அந்த வகையில், தொடக்கப்பள்ளி (P4 to P6) மாணவர்களுக்காக நடத்தப்பட்ட "கதைப்போமா" நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதொரு கற்றல் அனுபவமாக அமைந்தது. அங் மோ கியோ (Ang Mo Kio), டேக் கீ (Teck Ghee Community Club) சமூக மன்றத்தில் தொடர்ந்து பத்து வாரங்கள் (March 2026 - May 2026) சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்ற கல்வி செயல்பாட்டுக் குழு ( Education Empowerment Committee- EEC) உறுப்பினர்களால் “கதைப்போமா” என்னும் வாசிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு துணைப்பாட வகுப்புகள் நடத்தி வரும் கல்வி செயற்பாட்டுக் குழு, பொதுவாக சிங்கப்பூரில் மாணவர்களுக்கு வகுப்பறைகளைத் தாண்டி தமிழில் பேசுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு தான் என்பதைக் கண்டறிந்தது. அந்தக் குறையை நிறைவு செய்யக் களமிறங்கினர் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்ற உறுப்பினர்கள். மீனாட்சி சுந்தரம் காமேஸ்வரன் மற்றும் தாரகேஸ்வர் தலைமையிலான இந்தக் குழுவில் சுமார் 30 இளைஞர்கள் இணைந்து பங்காற்றினர். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், ஒவ்வொரு வாரமும் பல்வேறு சுவாரசியமான கதைகளைக் கேட்டு மகிழ்ந்ததோடு தாங்களும் கதைகளை வாசித்துப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர். இதன் மூலம் அவர்களின் சொற்களஞ்சியம் விரிவடைந்ததுடன் சரளமாக வாசிக்கும் திறனும் வளர்ந்தது. மேலும் கதைகளில் இடம்பெற்ற பாத்திரங்கள், சம்பவங்கள் மற்றும் கருத்துக்கள் மாணவர்களின் சிந்தனை ஆற்றலைத் தூண்டின.


கதை சொல்லும் நிகழ்வுகள், குழந்தைகளின் சிந்திக்கும் திறன், நினைவாற்றல் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கின்றன. ஒரு கதையைக் கேட்டு அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் மாணவர்கள் தங்கள் எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும் என்று கற்றுக் கொண்டனர். மொத்தத்தில் "கதைப்போமா" நிகழ்ச்சி மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தையும், தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தையும் அதிகரித்த ஒரு சிறப்பான முயற்சியாக அமைந்தது. விடுமுறை நாள் என்று கருதாமல் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் பெற்றோர்களும் உடனிருந்து தங்கள் பிள்ளைகளின் படைப்பாற்றலைக் கண்டு இரசித்தனர். இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படுவதன் மூலம் புத்தகங்களுடன் நட்புறவு கொள்ளும் ஒரு நல்ல தலைமுறையை உருவாக்க முடியும் என்று உணர்த்தி இருக்கிறார்கள் இந்த இளையர்கள்.


31 May 2026
Article By : சுவர்ணலட்சுமி ஜெயராமன்