அரிமா 2026: விளையாட்டின் வழியே தமிழை வென்ற இளையர்



போட்டி என்றாலே வெற்றியும் தோல்வியும் நம் நினைவுக்கு வரும். ஆனால் சில போட்டிகள் வெற்றியாளர்களை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும் மொழிப்பற்றையும் உருவாக்குகின்றன. விளையாட்டின் வழியே தமிழை அறிந்துகொண்டு, தமிழில் சிந்தித்து உரையாடும் அனுபவத்தை இளையர்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட தமிழ் விளையாட்டுப் போட்டியே அரிமா 2026. சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் கல்விச் செயல்பாட்டுக் குழு (Education Empowerment Committee – EEC) ஏற்பாடு செய்த அரிமா 2026, ஜூலை 18 அன்று உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் நடைபெற்றது. எட்டு உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் உற்சாகமாகப் பங்கேற்றனர். ஒரு விதையை விதைப்பது மட்டும் போதாது; அது செழித்து வளர வளமான மண்ணும் உரமும் தேவை. அதுபோல, மாணவர்களிடம் தமிழ்ப்பற்றை விதைப்பதில் குடும்பத்தின் பங்களிப்பும் இன்றியமையாதது என்ற நம்பிக்கையோடு, ஒவ்வொரு குழுவிலும் மூன்று மாணவர்களுடன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் ஆர்வலரும் பங்கேற்றார் . இந்த முயற்சி, தமிழைக் கற்பது வகுப்பறைக்குள் மட்டுமில்லாமல் வீட்டிலும் தொடர வேண்டும் என்ற செய்தியை இயல்பாக வெளிப்படுத்தியது.அரிமாவின் ஒவ்வொரு சுற்றும் மாணவர்களின் திறமைகளை வெவ்வேறு கோணங்களில் வெளிக்கொண்டு வந்தது. 'மின்னல் முரளி' சுற்றில் தமிழர் கலைகள், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் சிங்கப்பூர் தமிழ் ஆளுமைகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க மாணவர்கள் விரைந்து சிந்தித்தனர். தொடர்ந்து நடைபெற்ற 'ஒழுங்கா சொல்லு, மாப்பு! வச்சிடாத ஆப்பு!' சுற்றில் குறிப்புகள் மூலம் சொற்களைக் கண்டறிந்த அவர்கள், தமிழைப் புரிந்துகொள்ளும் திறனையும் கருத்துகளைத் தெளிவாகப் பரிமாறும் ஆற்றலையும் வெளிப்படுத்தினர்.

styc
styc
முதல் இரண்டு சுற்றுகளில் முன்னேறாத அணிகளுக்காக 'கதைப்போமா' என்ற சிறப்புச் சுற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இச்சுற்றில் மாணவர்கள் சமூகச் சூழல்கள் மற்றும் மனித விழுமியங்களை மையமாகக் கொண்ட கேள்விகளுக்கு தங்களது கருத்துகளைத் தன்னம்பிக்கையுடன் தமிழில் கலந்துரையாடினார்கள். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 'மறைநிலை' இறுதிச் சுற்றில், மாணவர்கள் தேர்ந்தெடுத்தப் பொருளை படைப்பாற்றலுடன் மேடையில் தமிழில் அறிமுகப்படுத்தினார்கள். இதன்மூலம் அவர்கள், மொழியாற்றல், பொதுப் பேச்சுத் திறன், மற்றும் குழு ஒற்றுமையை இயல்பாக வெளிப்படுத்தினர். தமிழ் மொழி மற்றும் கல்வித் துறையில் அனுபவம் பெற்ற திருமதி சேதுராமன் சித்ரா, திருமதி கங்கா பாஸ்கரன், திருமதி ரேணுகா விஸ்வலிங்கம் ஆகியோர் நடுவர்களாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். போட்டியாளர்களின் திறன்களை மதிப்பீடு செய்ததோடு, அவர்களது ஊக்கமூட்டும் கருத்துகளும் ஆலோசனைகளும் மாணவர்களுக்கு பயனுள்ள கற்றல் அனுபவமாக அமைந்தன. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக முனைவர் சிவகுமாரன் கலந்துகொண்டார். சிங்கப்பூரில் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் சைவ வளர்ச்சிக்காக நீண்டகாலமாகப் பங்களித்து வரும் அவரது வருகை, நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

styc
styc
அரிமா வெற்றியாளர்களை மட்டும் கொண்டாடிய நிகழ்ச்சியாக அமையவில்லை. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களின் முயற்சியை அங்கீகரிக்கும் வகையில் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதல் மூன்று இடங்களைப் பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருதுகளும் பரிசுத் தொகைகளும் வழங்கப்பட்டன. ஆனால், மேடையில் தமிழில் சிந்தித்து, தன்னம்பிக்கையுடன் பேசி, தங்களது திறமைகளை வெளிப்படுத்திய அனுபவமே பல மாணவர்களுக்கு மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது. குமாரி வர்ஷா வித்யா ஷங்கர் தலைமையிலான கல்விச் செயல்பாட்டுக் குழுவின் பல மாத உழைப்பின் பலனாக அரிமா 2026 உருவானது. இளையர்களிடையே தமிழின் மீதான ஈடுபாட்டை அதிகரித்து, தமிழை மகிழ்ச்சியாகவும் சுவாரசியமாகவும் அனுபவிக்கச் செய்வதே அரிமாவின் முக்கிய நோக்கமாக இருந்தது. தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல; நம் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் அடையாளம் என்பதை மாணவர்கள் அனுபவத்தின் வழியே உணர்ந்தனர். விளையாட்டின் வழியே கற்றல், குழுவாகச் சிந்தித்தல், கருத்துகளைப் பகிர்தல் ஆகியவற்றை ஒருங்கிணைத்த அரிமா, மாணவர்களுக்கு மறக்க முடியாத தமிழ்சார் அனுபவமாக அமைந்தது. போட்டிகள் வெற்றியாளர்களை உருவாக்கலாம். ஆனால் அரிமா 2026, அதையும் தாண்டி தமிழை மகிழ்ச்சியாகவும், சுவாரசியமாகவும், மறக்க முடியாத அனுபவமாகவும் இளையர்களிடம் கொண்டு சேர்த்தது. இன்று விளையாட்டின் வழியே விதைக்கப்பட்ட அந்த தமிழ்ப்பற்று, நாளைய தலைமுறையின் வாழ்விலும் சமூகத்திலும் வேரூன்றும் என்பதில் ஐயமில்லை.

styc
styc

18 July 2026

Article By : சுவர்ணலட்சுமி ஜெயராமன்